பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் இடிகரை
ஶ்ரீரங்கத்தை போன்று தொன்மையான தலம்
கொங்கு தேசத்தில்இது ஒன்றே!!
அருள்மிகு பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில்...!!
இந்த கோயில் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை என்னும் ஊரில் அருள்மிகு பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில்
உள்ள இடிகரை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. கோவை ரயில் நிலையத்தில் இருந்தும் இக்கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதர் மூலவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் குடதிசை பின்புகாட்டி, குணதிசை ஸ்ரீரங்கத்தை நோக்கி, வடதிசை பாதம் நீட்டி, தென்திசை முடியை வைத்து, கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்.
ஆனந்த ஓரக சயனக் கோலத்தில் அதாவது உறங்குவது போல் படுத்து விசேஷமான பார்வை நம் மீது படும்படி அருள்புரிகின்றார்.
இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீர ராகவ சுவாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.
வேறென்ன சிறப்பு?
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னதிகள் உள்ளன.
இத்திவ்ய ஸ்தலம் மற்ற வைணவத் ஸ்தலங்களிலிருந்து மாறுபட்ட அமைப்பைக் கொண்டதாக உயரமான இடத்தில் மாடக் கோயில் போல் அமைந்துள்ளது.
கொங்கு நாட்டில் ஸ்ரீரங்கத்தைப் போன்று பாம்பணையில் பள்ளி கொண்டு அர்ச்சாரூபியாய் எம்பெருமான் எழுந்தருளி சேவை சாதிக்கும் தொன்மையான ஸ்தலம் இது ஒன்றே.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகுண்ட ஏகாதசி, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், ஆனி திருமஞ்சனம், திருஆடிப்பூரம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி கொலு, தீபாவளி, கார்த்திகையில் சர்வாலய தீபம், பாஞ்சராத்திர தீபம், ஸ்ரீஹனுமன் ஜெயந்தி, தை முதல் நாள் கருட சேவை, சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு என மாத வைபவங்களாக கொண்டாடப்படுகின்றன.
சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு நாட்களிலும் திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் வைபவமாகும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
ஸ்ரீசத்ய நாராயணர் சன்னதியில் நடைபெறும் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்வதால் விவாகம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவருக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment