மழையை நிறுத்தி பின்னர் பெய்விக்க செய்த தொழுப்பேடு சித்தர்
மழையை நிறுத்தி பின்னர் பெய்விக்க செய்த தொழுப்பேடு சித்தர்
பாண்டா ஆரஞ்ச் மற்றும் தொழுப்பேடு சித்தர்
தொழுப்பேடு சித்தர் என்னும் ஒரு அற்புதமான சித்தர் இருந்தார். ஒரு முறை ஒரு முரட்டு ஆசாமி அந்த சித்தரை சோதிக்கும் பொருட்டு தன்னுடைய கார் நிறைய அயல்நாட்டு மதுவகையான விஷ்கி பாட்டில்களுடன் வந்து அவரிடம், “சுவாமி, கொஞ்சம் குளிர் பானங்கள் பாண்டா ஆரஞ்ச் வைத்திருக்கிறேன், தரட்டுமா ?“ என்று கேட்டான்.
சித்தருக்குத் தெரியாத இரகசியமா ? இருந்தாலும் அவர் ஒன்றும் அறியாதவர்போல், ”பாண்டா ஆரஞ்சா, ஒடச்சி குடுடா,“ என்று கூறவே எல்லா சாராய பாட்டில்களையும் ஒவ்வொன்றாக உடைத்துக் கொடுக்க கொடுக்க அவரும் தொடர்ந்து குடித்து பாட்டில்களை காலி செய்து கொண்டு வந்தார்.
தாகம் ஜாஸ்தி ஆய்டிச்சி
பாட்டில்களை திறந்து கொடுத்த அந்த ஆசாமி ஒரு கட்டத்தில் மலைத்து போய் ஒன்றும் பேசாமல் அயர்ந்து போய் நின்று விட்டான். ஆனால், சித்தரோ, “எங்கேடா நைனா, பேண்டா. ஒடச்சி குடுடா, இப்போ தாகம் ஜாஸ்தி ஆய்டிச்சி,” என்றார்.
விஷ்கி, அயல்நாட்டு சாராயம்
அவன் பயத்தால் வெலவெலத்து நடுங்கி விட்டான். நெடுஞ்சாண் கிடையாய் அவர் காலில் விழுந்தான். “சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். அவை எல்லாம் விஷ்கி, அயல்நாட்டு சாராயம். உங்களை சோதிப்பதற்காக ஏதோ தவறு செய்து விட்டேன். பெரியவர் நீங்கள் தயவு செய்து என்னுடைய இந்த மட்டமான செயலை மன்னித்து விடுங்கள்,“ என்று மன்றாடி கேட்டுக் கொண்டான்.
பாபத்திற்கு பிராயசித்தம்
சித்தர்பிரானும் ஒன்றும் அறியாதவர் போல், “அப்படியா, அது எல்லாம் கூல் ட்ரிங்ஸ் இல்லையா, பரவாயில்லை, கண்ணு.“ என்று அன்புடன் அவனுக்கு ஆறுதல் அளித்தார்.
வந்த ஆசாமி, “சுவாமி, நீங்கள் மன்னிப்பு அளித்து விட்டாலும். நான் செய்தது தவறு அல்லவா. அதற்கு ஏதாவது பிராயசித்தம் செய்தால்தான் என்னுடைய மனது ஆறும். தாங்கள் தயவு செய்து இந்த தவறுக்கு ஏதாவது பிராயசித்தத்தை சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன், என்று பிராயசித்தத்திற்காக வேண்டி நின்றான்.
அன்னதானம்
க ருணைக் கடலான தொழுப்பேடு மகானும், “என்ன நைனா, இது ஒரு பெரிய தப்பு இல்ல. இருந்தாலும் நீ கேட்குற. வர அமாவாசை நாள்ல ஒரு பத்தாயிரம் பேருக்கு நல்ல வட பாயசம் சாப்பாடு இங்க போட்டுடு போதும்,“ என்று அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.
அமாவாசை திதி அன்னதானம்
அவனும் சித்தர் கூறியது போல் அடுத்து வந்த அமாவாசை திதியில் பிரமாதமாக வடை பாயசம் கூட்டு பலவகை கறியுடன் சமையல் செய்து முழு வாழை இட்டு பத்தாயிரம் பேருக்கு மேல் வரவழைத்து வெட்ட வெளியில் தொழுப்பேடு சித்தர் முன்னிலையில் உணவு பரிமாறினான். அனைவரும் உணவருந்த அமர்ந்து விட்டனர்.
வருணன் எங்க இங்க வந்தான்?
ஆனால், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதுவரை எந்த அறிகுறியும் இல்லாத வானத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து உடனே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.
அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து சித்தர்பிரான் முன் வரப் போகும் மழையைக் குறித்து தெரிவித்தார்கள்.
தொழுப்பேடு சித்தர் பெரும்பாலும் தலையைக் குனிந்த நிலையில் தான் இருப்பார். எனவே அவர்கள் மழையைப் பற்றி அவரிடம் தெரிவித்தபோது அப்பாவி தனமாக, “அப்படியா, மழை பெய்யப் போகிறதா. வருணன் எங்க இங்க வந்தான்,“ என்று கேட்டாராம்.
மறைந்த கருமேகங்கள்
தலையைக் குனிந்து கொண்டே இருந்த சித்தர் வானைத்தைப் பார்த்து கை விரலால் ஒரு கோடு போட்டார். அவ்வளவுதான். அங்கே வானத்தில் மின்னலைப் போல் பளீரென ஒரு கோடு விழுந்தது. கோட்டின் இரண்டு பக்கத்தில் இருந்த கருமேகங்கள் நொடியில் நகர்ந்து மறைந்தன. கண் முன் நடந்த அந்த அற்புத செயலைக் கண்டு வந்திருந்த அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். பின்னர் அமைதியாக உணவருந்த ஆரம்பித்தனர்.
அனைவரும் உணவருந்திய பின் அடியார்களும் அந்த முரட்டு ஆசாமியும் சித்தருக்கு நன்றி தெரிவித்தனர். “சுவாமி, ஒரு மழை துளி கூட இல்லை. அனைவரும் உணவருந்தி முடித்து விட்டனர்,“.
மீண்டும் மழை வெள்ளமாய்ப் பொழிந்தது
“அப்படியா,“ என்று சொல்லி வானத்தை பார்த்து தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டினார் சித்தர். மீண்டும் எங்கோ சென்று மறைந்த கார் மேகங்கள் ஒன்று சேர்ந்தன, மழை வெள்ளமாய்ப் பொழிந்தது. அடியார்களின் பிரசாத இலைகள் அனைத்தும் அந்த தெய்வீக மழைப் பொழிவில் கரைந்து மறைந்தன.
தொழுப்பேடு சித்தரின் கருணையே கருணை
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment