Search This Blog

Saturday, May 15, 2021

பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் ,கோடிஹத்தி தோஷங்களை நீக்கும் வானமுட்டி பெருமாள் ஆலயம்

 ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் ,கோடிஹத்தி தோஷங்களை நீக்கும் வானமுட்டி பெருமாள் ஆலயம்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் ஆலயம் இருக்கிறது. மிகப்பெரிய உருவத்தில் அமைந்த இந்த பெருமாளின் திருக்கோவில் வரலாற்றை நாம் காண்போம்.

தல வரலாறு:

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குடகு மலைச் சாரலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். பல மருத்துவர்கள் முயன்றும் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாத அந்த நோயாளி, மனம் போன போக்கில், நடக்கத் தொடங்கினான்.

நாரத முனிவர். 

அப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில், அவனது காதுகளில் தெய்வீக வீணை ஓசை கேட்டது. ஓசை வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஒரு முனிவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, நாரத முனிவர். அவரை வணங்கி நின்றான், அந்த தொழு நோயாளி.

கொலை, கொள்ளை பாவம் 

“இளம் வயதில் காடுகளில் பதுங்கி இருந்து, வழிப்போக்கர்களை வழி மறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததின் விளைவு இந்த வியாதி” என்று முனிவரிடம் கூறினான்.

நாரதர் மந்திர உபதேசம் 

அந்த நோயாளிக்காக மனம் இரங்கிய நாரதர், அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினந்தோறும் ஜெபிக்கும்படி கூறினார். நோயாளியும் அப்படியேச் செய்து வந்தான்.

பாவ விமோசனம்

ஒரு நாள் ஒரு அசரீரி ஒலித்தது. “உனக்கு கடுமையான தோஷம் உள்ளது. அது நீங்குவதற்கு காவிரிக் கரையில் காணப்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்த தீர்த்தத்தில் உன் நோய் குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம்அடைந்து முக்தி பெறுவாய்” என்றது.

மாணிக்க சகாயேஸ்வரர் 

மனம் மகிழ்ந்த அவன், தன் பயணத்தைத் தொடர்ந்தான். காவிரிக் கரையில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று, அங்கிருந்த திருக்குளங்களில் நீராடினான். அதன் ஒரு கட்டமாக மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு அருள்பாலிக்கும் மாணிக்க சகாயேஸ்வரரை மனமுருக வணங்கி நின்றான்.

அப்போது, “பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன்னை பற்றியிருக்கும் பிணிகள் யாவும் நீங்கும்” என்று ஒரு அசரீரி ஒலித்தது.

அதன்படியே அந்த நோயாளி சென்று நீராடினான். அவனது பிணி நீங்கி, பொன் நிற மேனி கொண்டவனாக மாறினான். தன்னை அழகுடையவனாக மாற்றி, இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு வடதிசை நோக்கி புறப்பட்டான்.



பெரிய அத்தி மரத்தில் பெருமாள் 

ஓரிடத்தில் ஒரு பெரிய அத்தி மரம் தோன்றியது. அந்த மரத்தில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் தாங்கி பெருமாள் காட்சி அளித்தார். அவரது மார்பில் இருந்து ஒரு ஒளிப் பிழம்பானது, விண்ணும் மண்ணும் நிரம்ப நின்றது.

‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’

“பக்தா! பொன்னி நதியில் நீராடி நோயில் இருந்து விடுபட்ட உன்னை இனி ‘பிப்பிலர்’ என அனைவரும் அழைப்பர். நீ நீராடிய தீர்த்தம் இனி ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என அழைக்கப்படும். இந்த காவிரி தீர்த்த கட்டத்தில் நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி, பாவப் பிணி அனைத்தும் நீங்கும்” என அருளி மறைந்தார்.

கோடிஹத்தி தோஷம் 

பிப்பில மகரிஷியின் கோடிஹத்தி தோஷங்களையும் இத் தலம் நிவாரணம் செய்ததால் இத்தலம் ‘கோடி ஹத்தி’ எனவும், ‘பாப விமோசனபுரம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. கோடிஹத்தி என்ற பெயர் நாளடைவில் மருவி, தற்போது இத்தலம் ‘கோழிகுத்தி’ என்று விளங்குகிறது. இங்கு அருளும் பெருமாள் ‘வானமுட்டி பெருமாள்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

தஞ்சை சரபோஜி மன்னன் கட்டிய ஆலயம்

வானமுட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், கோழிகுத்தி வந்தார். தனக்கு யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள வேண்டும் என வேண்டி நின்றார். பிப்பிலருக்கு அருளியது போல், சரபோஜி மகா ராஜாவுக்கும் அத்தி மரத்தில் வானளாவிய காட்சி தந்து அருளினார் பெருமாள். மன்னனின் தோஷத்தையும் நீக்கினார்.



 அத்தி மரத்தில் 14 அடி பெருமாள் 

மன்னனின் மனதில் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்தது. தான் கண்ட காட்சியை அனைவரும் காண வேண்டுமென எண்ணினார். வானளாவிய பெருமாளின் திருக்கோலத்தை, அதே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக வடித்தார். அவரையே மூலவராய் கொண்டு ஓர் ஆலயம் எழுப்பினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்

1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாள் 

கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.

பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் நீக்கும் அத்திமர பெருமாள் 

மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

ஆலயம் திறந்துஇருக்கும் நேரம் 

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி செல்வது ?:

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment