உலக புகழ்பெற்ற பூரி ரத யாத்திரை!
பூரி ஆலயத்தில் ஒரு ஆண்டில் பல உற்சவங்கள் நடைபெற்றால் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த ரதயாத்திரை மிக முக்கியமானது!
இதற்கென ஒவ்வோர் ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மூன்று மூலவர்களுக்கும் மூன்று தேர்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சுவாமி ஜகந்நாதர் எழுந்தருளும் தேரான 'நந்தி கோஷம்' 45 அடி உயரத்திலும் 35 அடி அகலத்திலும், பாலபத்திரர் எழுந்தருளும் தேரான 'தலத்வாஜா' 44 அடி உயரத்திலும் சுபத்ரா எழுந்தருளும் தேரான 'தேபாதலனா' 43 அடி உயரத்திலும் புதிய தேர்கள் மரத்தால் கட்டப்படுகிறது.
தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜகந்நாதர், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.
வண்ணமயமாகக் காட்சி அளிக்கும் இந்தத் தேர்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டபின் ரதயாத்திரை தொடங்கும். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும். தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே குவிவார்கள்.
பூரி ஜகந்நாதர் ஆலயத்துக்கு சிறிது தூரத்தில் உள்ள மவுசிமா கோயில் மற்றும் குண்டிச்சா கோயில் வரை இந்த யாத்திரை செல்லும். குண்டிச்சா கோயிலில் சுவாமி ஜகந்நாதர் தங்கியிருக்கும்போது தேவி மகாலட்சுமி சுவாமியை வந்து தரிசிப்பதாகவும் பிறகு சுவாமியோடு சேர்ந்து கோயிலுக்கு எழுந்தருள்வதாகவும் ஐதிகம்.
குண்டிச்சா கோயில் தான் பூரியில் உள்ள கடவுள்களின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இதற்காக ஜகநாதர், அவரின் அண்ணன் பாலாபத்ரா மற்றும் தங்கை தேவி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேரில் பூரியின் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வர். ஏழு நாள்களுக்குப் பிறகே இவர்கள் பூரியில் உள்ள கோயிலுக்குத் திரும்புவர். இதைக் காண உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பூரிக்கு வந்துவிடுவர்.
No comments:
Post a Comment