Search This Blog

Sunday, July 14, 2024

மகிழ்ச்சியான வாழ்வு தருவார் மயிலம் முருகன்

 மகிழ்ச்சியான வாழ்வு தருவார் மயிலம் முருகன்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது திருமயிலம் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகில், கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.



தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கே வடக்கு திசை நோக்கித் தவமிருந்து முருகப்பெருமானின் வாகனமாக மாறினார். எனவே, அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது என்கிறது ஸ்தல புராணம்.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்ஸவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிப்பது வழக்கம்.

கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில்

பிரதி செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால், கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இதேபோல உற்ஸவமூர்த்தி முருகப் பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில், சஷ்டி நாளில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் விரைவிலேயே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்!

மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்ரமணியர்.

பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள்பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வருகிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்ஸவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.



மூன்றாவது உற்ஸவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்ஸவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.

No comments:

Post a Comment