Search This Blog

Monday, July 15, 2024

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்-சுதர்ஸன சக்கரம்

 ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

இன்று ஆனி மாதம்  சித்திரை நக்ஷத்திரம். ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்-ஸ்ரீசுதர்ஸன ஜெயந்தி!



சுதர்ஸன சக்கரம் என்றதும் நம் நினைவில் வருவது ஸ்ரீமஹாவிஷ்ணுதான். தன்னுடைய நான்கு திருக்கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்), கதை( கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சார்ங்கம்) திவ்யாயுதங்களாக தரித்திருப்பார்!

மஹாவிஷ்ணுவின் ஐந்து திவ்யாயுதங்களில் முக்கியமானது 'சக்கரம்' எனப்போற்றப்படும் 'ஸ்ரீசுதர்ஸனம்' ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தலுக்கு உறுதுணையாக இருப்பவர்!

சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்ஸனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றும் போற்றுவர். பெரியாழ்வார் "வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு " என்று இவரை வாழ்த்துகிறார். ஆண்டாள் திருப்பாவையில் "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" என்று போற்றுகிறாள். ஸ்வாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார் - அதாவது இவர் மஹாவிஷ்ணுவிற்கு இணையானவர் என்கிறார்! "சுதர்ஸனாஷ்டகம்" என்ற  ஸ்தோத்ர மாலையிலும் இவரை போற்றியுள்ளார்!

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும், சக்கரத்தாழ்வார் உடன் அவதரித்துள்ளார் -

*மச்சாவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாகவும்;

*கூர்மாவதாரத்தில் மந்திர மலையை சுதர்ஸனம் கொண்டே பெயர்த்தெடுத்தனர்;

*வராஹவதாரத்தில் வராஹத்தின் கொம்பாகவும்;

*ந்ருஸிம்ஹ அவதாரத்தில் ந்ருஸிம்ஹரின் நகமாகவும்;

*வாமனாவதாரத்தில் சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்திய தர்பையாகவும்;

*பரசுராமவதாரத்தில் பரசுராமரின் கோடரியாகவும்;

*ராமாவதாரத்தில் ராமரின் சகோதரன் பரதனாகவும்;

*கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்தது சுதர்ஸன சக்கரம்தான்.

என அனைத்து அவதாரங்களிலும் சக்கரத்தாழ்வார் உடன் இருந்தவர்!



'ஆதிமூலமே' என்றழைத்த கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் திருக்கரத்திலிருந்து சீறிக் கிளம்பி காத்தது சக்கரத்தாழ்வார்தான்!

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீஷனை காப்பாற்றி துர்வாசரின் கர்வத்தை அடக்கியது ஸ்ரீசக்கரமே!

மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட, ஸ்ரீகிருஷ்ணன் சூரியனை மறைக்க சுதல்ஸனரையே ப்ரயோகித்தார்!

சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று நேத்ரங்களுடன், சிரசில் அக்னி க்ரீடம் தாங்கி, பதினாறு கரங்கள்-பதினாறு திவ்யாயுதங்களுடன் சேவை சாதிப்பார்!

சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் விதத்தில், அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக ந்ருஸிம்ஹரை இடம்பெறச் செய்தனர்! ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் சக்கரத்தாழ்வாரும், பின்பக்கம் த்ரிகோண (முக்கோணம்) சக்கரத்தின் மத்தியில் யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர சேவிகௌகலாம் எல்லா சன்னிதிகளிலும்!

ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் சேவித்து ப்ரதட்ஷணம் செய்யும் பட்சத்தில், நமக்கு நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்டலக்ஷ்மிகளையும், எட்டு திக்குகளையும் வணங்கிய பலனுடன், பதினாறு வகையான பேரருளும் கிட்டும் என்பது ஐதீகம்!

உலகில் உள்ள எந்த தீயசக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லது இந்த மஹாசுதர்ஸனம்! மந்திர தந்திர யந்திர அஸ்திர சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரிலிருந்து காக்கவல்லது இந்த மஹாசுதர்ஸன சக்கரம்!!


No comments:

Post a Comment