ராகு – கேது தோஷம் நீக்கும் சென்னை கோவில்
வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்🌹
சமஸ்கிருத மொழியில் சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு என்றாலே ஒரு தீய சக்தி கொண்ட விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது கிரகங்களும் பாம்பின் அம்சமாக கருதப்படுகின்றன. அப்படியான ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
கோயில் வரலாறு...
சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில் இருக்கிறது.
இக்கோயிலின் இறைவனான சிவபெருமானின் மூலவர் நாகேஸ்வரர் என்றும், உற்சவர் சோமாஸ்கந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். தாயார் காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம் இருக்கிறது.
தல விருட்சமாக செண்பக மரம் இருக்கிறது.
கோயில் வரலாறு படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த “அருண்மொழிராமதேவர்” என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் “சேக்கிழார்” என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன “பெரியபுராணம்” “பிள்ளைத்தமிழ்” போன்றவற்றை இயற்றிவர்.
ஒரு சமயம் சேக்கிழார் கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரர் கோயிலில் சிவபெருமானை தரிசித்த சேக்கிழார், தினமும் அவரை வழிபட விரும்பினார். ஆனால் அவ்வளவு தொலைவு சென்று அவ்வப்போது வழிபடுவது இயலாது என்பதால், தான் வசிக்கும் இப்பகுதியிலேயே ஒரு கோயில் கட்டி நாகேஸ்வரர் என்கிற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடலானார் அன்று முதல் இத்தலம் வடநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
வடநாகேஸ்வரம் கோயில் சிறப்புக்கள்
இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேக்கிழார் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் பின்னப்பட்ட போது அதை நீக்கிவிட்டு புதிய சிவலிங்கத்தை பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். அப்போது ஒரு நாள் இவ்வூரில் இருக்கும் ஒரு பக்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான், தனக்கு பழைய லிங்கத்தையே மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறு கூற, அதன் படியே சேதமான அந்த பழைய லிங்கத்தையே மீண்டும் பிரதிஷ்டை செய்தனர் புதிய லிங்கத்தை சிவன் சந்நிதிக்கு பின்புறம் வைத்துள்ளனர்.
இத்தலத்தில் சேக்கிழாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. அனைத்து பூச நட்சத்திர தினத்தன்றும் இவருக்கு அபிஷேகம் பூஜைகள் நடக்கின்றன. மேலும் வைகாசி மாதத்தில் சேக்கிழார் சிவ தரிசனம் செய்யும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் ராகுவின் அம்சமாக இருக்கும் நாகேஸ்வராகிய சிவபெருமானுக்கு காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய மூன்று வேலையும் பாலபிஷேகம் செய்கின்றனர்.
இங்கு ராகு கால பூஜையின் போது ஸ்வாமிக்கு உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வழிபடுவோருக்கு நாக தோஷங்கள், ராகு – கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக கூறுகிறார்கள். நீங்கள் நைவேத்தியம் வைக்க கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருகின்றனர்.
கோயில் நடை திறப்பு...
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்...
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் குன்றத்தூர் என்ற ஊருக்கு அருகில் இருக்கும் வடநாகேஸ்வரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment