கசவனம்பட்டி
மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள் -சித்தர்கள்
அறிவோம்
நிர்வாண சுவாமி
ஒரு குழந்தையைப் போல் தம்மை
மறந்து, தாம் அவதரித்த கோலத்திலேயே இறுதிவரை தமது பக்தர்களுக்கு அருள்புரிந்த
கசவனம்பட்டி மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்கலாம்.
பிறந்த கோலத்துக்கு மாறிய சிறுவன்
கசவனம்பட்டிக்குக் கிழக்கே
உள்ள குட்டத்து ஆவாரம்பட்டியில் உள்ள கரட்டில், பன்னிரெண்டு வயதுப் பாலகன்
ஒருவன் பிறந்த மேனியுடன் சுற்றித் திரிவதை ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கண்டு, பரிதாபப்பட்டுச் சிறிது உணவு அளித்துக் கசவனம்பட்டிக்கு அழைத்து
வந்தனர். அந்தப் பாலகனை நீராடச் செய்து, ஆடைகள் அணிவித்தனர். ஆனால், அந்தப் பாலகன் தன் உடைகளைக் கிழித்து எறிந்துவிட்டு மீண்டும் பிறந்த
கோலத்திற்கே மாறிவிட்டான். இது போன்று பலமுறை முயற்சித்தும், உடை உடுத்தச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. காலப் போக்கில்
கசவனம்பட்டி மக்கள் கூச்சம் அருவருப்பின்றி அவரது திகம்பரக் கோலத்தை ஏற்றுக்
கொண்டனர்.
பிரம்ம ரக்ஸ்ய
உபநிடதம்
“தன்னை உடலாக நினைக்காமல் பிரம்மத்தில்
நிலைத்திருக்கும் ஞானியை இன்பமோ-துன்பமோ, நல்லதோ-தீயதோ ஒருபோதும்
தொடுவதில்லை. ஆத்மாவே அவருடைய சொத்து, அதிகாரம் மற்றும் எல்லாம்.
அவர் எப்போதுமே தான் உடல் என்ற எண்ணமற்று இருக்கின்றார்”, என்று பிரம்ம ரக்ஸ்ய உபநிடதம் கூறுவது போல், சுவாமிகள் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதது போல்
ஆகாயத்தைப் பார்ப்பதும், பிறகு மண்ணைப் பார்ப்பதும், தனக்குள் முணுமுணுப்பதுமாக இருப்பாராம்.
அவரைத் தேடிவரும் பக்தர்கள்
பலவிதப் பதார்த்தங்களை அவருக்குப் படைத்துவிட்டு, அவரது அருட்பார்வை தம் மீது
படாதா என்று காத்திருப்பார்களாம். அவர் அவற்றைச் சட்டை செய்வதில்லை. தான்
அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள சிறு குச்சிகளைப் பொறுக்கித் தரையில்
கிறுக்கிக்கொண்டே இருப்பாராம். யாராவது ஒரு பக்தரை அழைத்து அவற்றைக் கொடுப்பார்.
அந்தப் பக்தரின் தலையெழுத்தையே சுவாமிகள் மாற்றி எழுதிவிட்டார் என்று அந்த பக்தர்
பரவசமடைந்து அவற்றைப் பெற்றுக் கொள்வார்.
யோகி பாராட்டிய சுவாமிகள்
ஒருமுறை திருவண்ணாமலையில்
யோகி ராம்சுரத்குமார் அவர்களிடம், அவரது பக்தர்கள் இருவர் கசவனம்பட்டி
சுவாமிகளைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் “அவர் ஒரு பெரிய மகான், இன்று இரவு நீங்கள் சென்று அந்த மகானைத் தரிசனம் செய்யுங்கள், ஒரு அற்புதத்தைக் காண்பீர்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார்.
அவர்கள் கசவனம்பட்டிக்கு வந்த
போது நள்ளிரவு ஆகிவிட்டது. மௌன சுவாமிகள், அந்த ஊரிலுள்ள முத்தாலம்மன்
கோயிலில் அவர்களுக்காகக் காத்திருந்தாராம். அவர்கள் அளித்த பிரசாதத்தில் சிறிது
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சுவாமிகள் முத்தாலம்மன் கோயிலுக்குள் சென்றார்.
அவர் கருவறையில் நுழைந்ததும், பாலமுருகன் தோற்றத்தில், மயிலுடன் காட்சியளித்துவிட்டு மறைந்துவிட்டார்.
அந்த அற்புதம் கண்ட பக்தர்கள்
மீண்டும் திருவண்ணாமலைக்குச் சென்று யோகி ராம்சுரத்குமார் குருஜியைச் சந்தித்ததும்
அவராகவே, “அந்த அற்புதக் காட்சியைக் கண்டீர்களா? சுவாமி எனக்கு என்ன
கொடுத்தனுப்பியிருக்கிறார்?” என்று கேட்டாராம். அதற்கு
அவர்கள், சுவாமிகள் ஒன்றும் கொடுத்தனுப்ப வில்லை என்று கூறியதும் குருஜி, “அவர் எனக்கு ஒரு எலுமிச்சம் கனியைக் கொடுத்தனுப்பி யிருக்கிறார்”
என்று கூற, அந்தப் பக்தர்கள் கசவனம்பட்டியிலிருந்து கொண்டு வந்த பிரசாதத்தைத்
திறந்து பார்க்க அங்கே எலுமிச்சம் கனி இருந்துள்ளது.
குருஜி அதனைப் பரவசத்துடன்
பெற்று எலுமிச்சம் பழம் முழுவதையும் உண்டுவிட்டார்.
மகாசமாதிக்கு முன்னர் விரதம்
மௌன சுவாமிகள் மகாசமாதி
அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே உணவு உண்பதை நிறுத்திக் கொண்டார். துந்துபி
ஆண்டு, ஐப்பசி மாதம், ஐந்தாம் நாள்,(அக்டோபர் 22,1982) வெள்ளிக்கிழமை அன்று மூலநட்சத்திரத்தில், அதிகாலையில் பரிபூரணம் அடைந்தார்.
கசவனம்பட்டிப் பொதுமக்கள்
இதனை முரசு ஒலி மூலமாகவும், செய்தித் தாள்கள் மூலமாகவும்
சுவாமிகள் மகாசமாதி அடைந்ததைப் பக்தர்களுக்கு அறிவித்தனர். அதனை அறிந்த பக்தர்கள்
ஆயிரக்கணக்கில் அங்கு வந்து சுவாமிகளின் திருமேனியைத் தரிசனம் செய்தனர்.
சுவாமிகளின் திருமேனிக்கு
வைதீக முறைப்படி சகல அபிஷேகங்களும் செய்து, அவருக்காக அமைக்கப்பட்ட
குகைக்கோயிலினுள் அவரது திருமேனியை வைத்தனர். அப்போது வானில் கருடன் வட்டமிட, அந்தப் பகுதியில் மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்தது என்று கூறப்படுகிறது.
சுவாமிகளின் ஜீவசமாதியின்
மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சுவாமிகளின் பக்தர்கள், சமாதிப் பீடத்தின் மீது பிரம்மண்டமான ஆலயம் எழுப்பி, ரக்தாட்சி ஆண்டு தைத் திங்கள் 15-ம் நாள், 28.01.1985-ல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
சமாதிப் பீடத்தில் ஐம்பொன்
சிலையாக அமர்ந்திருக்கும் சுவாமிகளின் சிலாரூபம், தத்ரூபமாக அவரே
அமர்ந்திருப்பது போல் காட்சியளித்து நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
மௌன ஜோதி
நிர்வாண சுவாமிகள் எப்படி செல்வது?
மதுரை-செம்பட்டி-பழனி
சாலையில் உள்ள கன்னிவாடியிலிருந்து கசவனம்பட்டி நான்கு கிலோமீட்டர் தொலைவில்
உள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல்-கன்னிவாடி, வழி கசவனம்பட்டி என்று பேருந்து வசதிகள் உண்டு.
நன்றி : தி ஹிந்து செய்தித்தாள்
No comments:
Post a Comment