சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 23 முன்னிட்டு சிறப்பு பதிவு
🌺அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம் சரணம் .சிவமே ஜெயம் சிவமே என் வரமே 🌺
முந்தைய தலபுராண பதிவில் புன்னைவனமாகிய சங்கரன்கோவிலில் சிவபெருமான் சங்கரநாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுத்ததை பற்றி தேவகுருவாகிய வியாழபகவான் சங்கன்,பதுமனுக்கு கூறியதை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் சங்கபத்மருக்கு காட்சி பற்றி பார்ப்போம். வியாழ பகவான் சங்கன், பதுமனிடம் நீங்கள் இருவரும் அந்த புன்னைவனத்தில்(சங்கரன்கோவிலில்) அரிய தவம் செய்து சங்கரநாராயணர் வடிவ காட்சியை கண்டால் உங்கள் மயக்கம் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.
🌿சிவன் பெரியவர், விஷ்ணு பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த சங்கன், பதுமன் என்ற நாகர்கள் வியாழ பகவானின் அறிவுரையை ஏற்று திருநெல்வேலிக்கு மேற்கு செண்பக வனமாகிய குற்றாலத்துக்கு வடக்கு கனா வனமாகிய கரிவலம்வந்தநல்லூருக்கு தெற்காக புன்னை வனமாகிய சங்கரன்கோவிலுக்கு வந்தனர். அத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னை கோமதி சன்னதி முன் தேவர்களால் செய்த தீர்த்தத்தில் நீராடி சிவபெருமான் திருவடியையும் விஷ்ணுமூர்த்தி திருவடியையும் நினைத்து தவம் செய்து கொண்டிருந்தனர்.
🌿 இவ்வாறு சங்கன், பதுமன் இருவரும் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருந்து உயர்ந்த தவம் செய்து கொண்டிருக்கும்போது மேகவண்ணனாகிய விஷ்ணுவிடம் ஆதிசேஷன் எழுந்து சுவாமி, சிவபெருமானுடன் ஒன்றாக இருக்கும் உமது திருமேனியை தரிசிக்கும் பொருட்டு புன்னை வனத்தில்(சங்கரன்கோவிலில்) பதுமன் அரிய தவம் செய்கிறான் என்ற உடன் ஆதிசேஷனை நோக்கி வீஷ்ணு பகவான் கூறினார். உலகத்தை சிருஷ்டிக்கும் பிரம்மனும் காப்பனுமாகிய நானும் சிவபிரானுக்கு வேறாவோமா? தேவர் என்று சொல்லப்படுவர் எல்லாருமே சிவபிரானின் அம்சமாவர். தமது இடப்பக்கத்திலே இருக்கும் எனனுடைய வடிவத்தை அந்த சிவபிரானே காண்பிப்பார் என்றார்.
🌿அதே சமயம் வாசுகி எழுந்து சிவபெருமானை வணங்கி ஐயனே பாற்கடலில் நித்திரை செய்யும் அந்த பரந்தாமனுடன் தாங்கள் ஒன்றாக இருக்கும் அரிய உருவத்தை காண புன்னை வனத்தில்(சங்கரன்கோவிலில்) சங்கன் தவம் புரிகிறான் என்று தெரிவித்தான். அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் தமது ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புன்னைவனத்துக்கு மாணிக்க மலையை சேர்ந்த நீலமலை போல வந்து பேரழகுடன் சங்கபத்மருக்கு முன்னே எழுந்தருளி ஓரு பக்கத்தில் கங்கையை தரித்த ஜடாமகுடமும் நாக குண்டலமும் சந்திர கிரணம் போன்ற விபூதியும் மழு ஆயுதமும் சர்ப்ப ஆபரணமும் மாலையும் புலித்தோலையும் சர்ப்பமாகிய வீரக்கழலும் மற்றொரு பக்கத்தில் ரத்னகீரிடமும் மகாகுண்டலமும் ரத்னகிரீடத்தின் நீலமணியின் ஒளியைப் போல கஸ்தூரி பொட்டும் சக்ராயுதமும் பொற்பூணுலும் துளுவமாலையும் பீதாம்பரமும் பொன்னால் ஆகிய வீரக்கழலும் பிரகாசிக்க நின்று காட்சி தந்தார்.
🌿 இவ்வாறு காட்சி தந்த சங்கரநாராயணர் வடிவத்தை தரிசித்து மனமருகி தாழ்ந்து வணங்கி பரமானந்தம் உண்டாக மெய்மயிர் சிலிர்க்க கண்கள் ஆனந்த நீர்துளி பெருக சங்கபத்மர் பலவித தோத்திரங்கள் செய்தனர். மயக்கம் தெளிந்த பத்மன் சங்கரநாராயணரை நோக்கி ஐயனே,கங்கையை தரித்த கருணைக்கடலே என்று புத்தி கூர்மையின்மையால் நீங்கள் இருவரும் வேறு என்று என்னும் எண்ணம் தோன்றியது அடியேனுக்கு திருவருள் செய்த கடவுளே சித்தம் தெளிந்தது என்று கூறி வழிபட்டு நின்றான்.
இதை கண்ட சங்கரநாராயணர் மகிழ்ந்து சங்க, பத்மர் இருவரையும் நோக்கி உங்களுக்கு வேண்டிய வரம் எது என்று கேட்டார்.
🌿சங்கபத்மர் இருவரும் அவரை மீண்டும் வணங்கி சுவாமி பிரம்மவிஷ்ணு முதலிய தேவர் எல்லாம் உம்முடைய அம்சம் என்றும் உணர்ச்சி பெருக்கத்தால் ஐயனே உம்முடைய திருவடிகளை எப்போதும் தோத்திரம் சேய்து நாங்கள் எப்போதும் உம்மிடம் இருக்க வேண்டும்
🌿 இந்த பூலோகத்தில் பாவத்தை சம்பாதிக்கும் கொடியவரும் ஒருதரம் இந்த நாகசுனையில் நீராடி உம் திருவடிகளை வணங்குவராயின் அவர்கள் மோட்சம் அடைய வேண்டும். நீங்கள் இந்த புன்னைவனத்தில்(சங்கரன்கோவிலில்) இருந்து உலகத்தார் விரும்பிய வரங்களை கொடுக்க வேண்டும் என்று வேண்டும் என்று கேட்க அவ்வாறே கொடுத்தருளி சங்கபத்மர் மட்டுமின்றி எல்லோரும் தொழும் தெய்வமாக புன்னைவனத்தில்(சங்கரன்கோவிலில்) எழுந்தருளி இருந்தனர். இவ்வாறு சஙகரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் தலபுராணம் கூறுகிறது.🌿
நன்றி:ஸ்ரீவில்லிபுத்தூரான்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் திருநெல்வேலியிலிருந்து 60 KM, குற்றாலத்திலிருந்து 50 KM, ஶ்ரீவில்லிபுத்தூரலிருந்து 43 KM, திருச்செந்தூரிலிருந்து 115 KM தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment