வரலட்சுமி விரதம்: அலைமகளே வருக, ஐஸ்வர்யம் தருக!
வரலட்சுமி விரதம்: உலகின் சுபிட்சத்துக்கும் சகலவிதமான செல்வ சம்பத்துகளுக்கும் உரியவள் மகாலட்சுமி. வீட்டில் பொன் - பொருள் பெருகவும், மங்கல காரியங்கள் நல்லபடியே ஸித்திக்கவும் மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும்.
வரும் ஆகஸ்ட் 16-ம் நாள், வரலட்சுமி விரத தினம். அன்று விரதமிருந்து வழிபடுவதுடன், அலைமகளின் அருள் நிறைந்த ஆலயங்களைத் தரிசித்து வருவதும் சிறப்பு. அவ்வகையில் திருமகள் தலங்களையும் அங்கே செய்யவேண்டிய சிறப்பு வழிபாடுகளையும் அறிந்து மகிழ்வோமா!
திருலோக்கி தலத்தில் தோஷங்கள் போக்கும் வில்வ வழிபாடு
திருமகளுக்கு விசேஷமான பத்ரம் வில்வம்தான். வில்வ மரங்கள் லட்சுமி அம்சம் கொண்டவை. வில்வ இலைகளைப் பயன்படுத்திப் பூஜை செய்தால், எப்பிறவியிலும் வறுமை நம்மை அண்டாது. திருமகளை ‘பில்வ நிலயாயை நம:’ என்று போற்றித் துதிப்பார்கள் (பில்வம் -வில்வம் ). விசேஷமான வில்வத்தினை பூலோகத்துக்கு முதன்முதலில் கொண்டு வந்தவளே திருமகள்தான் என்கின்றன புராணங்கள்.
இந்தப் புராணச் சம்பவம் நிகழ்ந்த தலம்தான், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருலோக்கி எனப்படும் திரைலோக்கிய சுந்தரம்.
ஒருமுறை திருமகளுக்கு, தான் எப்போதும் திருமாலைவிட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் எனும் விருப்பம் உண்டானது. அதற்காகத் தவமியற்ற எண்ணினாள். பூலோகத்தில் முனிவர்கள் விருப்பத்துடன் வந்து தவம் செய்யும் இடமான கொன்றை வனம் ஒன்றை அடைந்து சிவ பூஜை செய்து சிவதியானத்தில் ஆழ்ந்தாள்.
இங்ஙனம், ஆழ்ந்த தவத்தில் மூழ்கிய திருமகளின் சுவாசமானது மூன்று கலைக ளாகப் பிரிந்து, மும்மூன்று இலைகளை உடைய வில்வ பத்ரங்களாக மாறின. ஆகவே, அங்கே ஏராளமான வில்வ மரங்கள் தோன்ற ஆரம்பித்தன. அவற்றின் இலைகளைக் கொண்டு தனது வழிபாட்டினைத் தொடர்ந் தாள் திருமகள்.
அவளின் தவம் மற்றும் வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷபாரூடராகத் தோன்றி, அவள் விரும்பிய வரத்தை அளித் தார். திருமால் திருமகளை தனது திருமார் பில் ஏற்று, அங்கே அவளுக்கு நீங்காத இடம் தந்தார். அதுமட்டுமா? இங்கே தோன்றிய வில்வத்தையே தமக்குரிய பத்ரமாக ஏற்றுக் கொண்டார்.
இந்தத் தலத்தில், க்ஷீரசயனாப்தி நாராய ணர் என்பது மூலவர் திருநாமம். இவர் சயனக்கோலத்திலேயே நாராயண சொரூப மாகக் காட்சியளிப்பது சிறப்பு. இங்கே, மூலவர், வில்வத்தை உவந்து ஏற்பது சிறப்பு. இங்கு தல விருட்சமும் வில்வம்தான். இங்கே மகாலட்சுமி உருவாக்கிய தீர்த்தம் ‘க்ஷீர தீர்த்தம்’(பாற்குளம்). சகல பிதுர் தோஷங்களை யும் போக்கவல்ல தீர்த்தம் இது.
எப்படி வழிபடுவது?:
பெருமாளுக்கும் தாயாருக் கும் வில்வ மாலைகள் சாற்றி, வில்வ தளங்களால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம். சயனநாராயணப் பெருமாளின் திருமார்பில் உறைந்திருக்கும் மகா லட்சுமியைக் கண்குளிர தரிசித்து வழிபடுவதால், அந்த அன்னையின் கருணைப் பார்வை நம்மீது விழும்; சகல தோஷங்களையும் போக்க வல்ல தரிசனம் இது. தம்பதிகளுக்கிடையே என்றென்றும் பிணக்குகள் வராமலும் அந்நியோன்யம் குறையாமலும் இருக்க இங்கே வந்து வழிபடுகிறார்கள்.
முதலில் சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள ரிஷபாரூடரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்கு வந்து, அவருக்குச் சார்த்தப் பெற்ற வில்வப் பிரசாதத்தினை பெற்றுக்கொள்வது சிறப்பு. இதனால் என்றென்றும் நம்மைவிட்டு நீங்காது திருமகள் நிலைத்திருப்பாள் என்கின்றனர்.
தேரழுந்தூரில் திருமணத் தடை நீக்கும் வழிபாடு
மயிலாடுதுறைக்கு அருகில், குத்தாலத்துக்கு வடகிழக்கே சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது தேரழுந்தூர்.
அம்பிகை ஒருமுறை பசுவின் உருவம் கொண்டு கயிலையைவிட்டு நீங்கினாள். அதைக் கண்டு ஆற்றாத அலை மகளும் கலை மகளும் தாங்களும் பசுக்களாக மாறி, அம்பிகையுடன் வந்துவிட்டார்களாம்.
விநாயகர் கன்றாக உருக்கொண்டு அம்மாவைப் பின் தொடர்ந் தார். தேவர்களும் பசுக்கூட்டமாக இந்தத் தலத்தின் வனத்தில் நிறைந்தனர். இவர்களைப் பாதுகாக்கத் திருவுளம் கொண்ட திருமால், மேய்ப்பனாக உருவெடுத்து வந்தார். அதனாலேயே இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ‘கோஸஹர்’ (ஆமருவியப்பர்) என்பது திருநாமம்.
பசுவை மகாலட்சுமியின் அம்சம் என்பார்கள். அப்படியிருக்க முப்பெருந்தேவியரும் பசுவின் உருவிலேயே உலவிய புண்ணிய பூமி இது. இவ்வூரில் விசித்திரமான வழக்கம் உண்டு.
உற்சவ காலத்தில், வேதபுரீஸ்வரர் அனுக்ஞை பெற்ற பின்னரே, பெருமாள் தனக்குரிய வழிபாடுகளைக் காத்திருந்து ஏற்கிறார். அதேபோல், `கோசஹர்’ ஆகிய பெருமாளிடமிருந்து பிறந்த வீட்டுச் சீர் வந்த பின்னரே, இவ்வூர் சிவாலயத்தில் அம்பாள் திருக் கல்யாணத்திற்குத் தயார் ஆகிறாள். வேறெந்த தலத்திலும் காண்பதற்கரிய சிறப்பு இது.
சம்பந்தி வீடுகளில் மனப்பிணக்கு ஏற்பட்டு மனம் வருந்தும் இல்லறத் தார், (குறிப்பாகப் பெண்கள்) இத்தலத்துக்குச் சென்று வழிபடுவதால், பிணக்குகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.
எப்படி வழிபடுவது?:
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவியப்பர் ஆலயத்தில், மூலவரான தேவராஜன் 13 அடி உயர சாளக்ராமக் கல்லினால் உருவானவர். தாயார் செங்கமல வல்லி. இவர்களுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி, பால் பொருள்கள் தொடர்பான வணிகம் செய்பவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நற்பலன்கள் பெறுகிறார்கள். இங்கே கோபூஜை செய்வது விசேஷம். சகல தோஷங்களையும் போக்கிடும் சக்தி வாய்ந்த பிரார்த்தனை இது என்கின்றனர். மேலும், தாயாருக்குச் சந்தனம் சாற்றி வழிபட்டால், தோற்றப் பொலிவு - அழகு அதிகரிக்கும்.
திருநின்றியூரில் சுக்ர வார வழிபாடு!
மயிலாடுதுறையிருந்து சீர்காழி செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருநின்றியூர். இது, திருமகள் பூசித்த தலங்களில் விசேஷமானது. புராணக் காலத்தில் லட்சுமிபுரி என வழங்கப்பட்டதாம் இவ்வூர். ‘திரு’ ஆகிய மகாலட்சுமி நிரந்தரமாக நிலைத்த ஊர் என்பதால், திருநின்றவூர் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. அதுவே பிற்பாடு `திருநின்றியூர்’ ஆயிற்று என்பர். (சென்னைக்கு அருகிலும் ஒரு திருநின்றவூர் உண்டு!).
மகாலட்சுமி பூசித்ததால், இத்தலத்தில் அருளும் ஈசனுக்கு மகா லட்சுமீஸ்வரர் அல்லது லட்சுமிபுரீஸ்வரர் என்று திருப்பெயர். திருமகள் இங்கே நீங்காது நிலைத்து நின்று பூஜிப்பதை ‘செந்தண் மாமலர் திருமகள் மருவும் திருநின்றியூர்’ என்று தேவாரம் போற்றிப் பரவுகிறது. திருமகளுக்கு உரித்தான விளாமரமே இத்தலத்திற்குரிய விருட்சம். ‘கபித்தம்’ எனப்படும் விளாவானது யானைகள் விரும்பி உண்ணக் கூடியது. விநாயகருக்கு மிக உகந்தது. பலன் தருவதில் வில்வத்திற்கு நிகரானது. வில்வ இலைகளைப் போலவே விளா மர இலைகளிலும் மகாலட்சுமியின் சாந்நித்தியம் பரிபூரணமாக நிறைந்திருக்கிறது. இந்த இலைகளால் மகாலட்சுமியை அர்ச்சித்து வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
எப்படி வழிபடுவது?:
மகாலட்சுமிக்கு உகந்த சுக்ர வாரத்தில், திருநின்றியூர் சிவாலயத்துக்குச் சென்று, விளா இலைகளால் இத்தலத்து ஈசனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால், சுக்ர தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமை கூடும். மட்டுமன்றி, பரசுராமருக்கு மாத்ருஹத்தி தோஷம் நீங்கிய தலம் இது. ஆகவே, தாய்வழி சாபங்கள் மற்றும் தோஷங்கள் நீங்கவும் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடலாம்!
No comments:
Post a Comment