சித்தர்கள் சித்து வேலை செய்ய யக்ஷினி அல்லது
குட்டிச்சாத்தான்களை ஏவுவார்களா? கவிஞர் கண்ணதாசன்
பார்வையில்
சத்திய சாயிபாபா பற்றி கண்ணதாசன்
சத்திய சாயிபாபா என்பவரைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச்
சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்; யாராவது அதைத்
தொட்டால் கையெல்லாம் ரத்தமாகி விடுமாம்.
திடீரென்று அவர் விபூதி கொடுப்பாராம்; வெறும் கையிலேயே
விபூதி வருமாம்.
பிறரது கனவில் ஊடுருவும் சக்தி அவருக்கிருக்கிறது என்பது
உண்மை.
குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது
என்று நான் நம்புகிறேன்.
என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.
முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார்; நான் கைகளால்
ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.
இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கும் கட்டத்துக்குள் ஒரு `கரண்ட்’ என்னை இழுக்கிறது; நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். `கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்று நான் சப்தமிடுகிறேன். அந்தக்
கரண்ட் என்னை விட்டு விடுகிறது.
பன்றிமலை சுவாமிகளைப் பற்றி கண்ணதாசன்
இதே போல் பன்றிமலை சுவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள்
கூறப்படுகின்றன.அவரை ஒரு நாள் பார்க்கப் போனேன்.
அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை
உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.
அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை
நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகிறது.
நெருப்பு என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் சுடுகிறது.
சந்தனம் என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் மணக்கிறது.
ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.
நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித்
தரும்படி அவரிடம் கேட்டால் அவர் `முருகா’ என்பார்.
எங்கிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்து விடுகின்றன.
திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான்
கருதுகிறேன்.
கோவை சாமியார் பற்றி கண்ணதாசன்
கோவை ஜெயில் ரோடில் 1950ஆம் ஆண்டில் நான் தங்கியிருந்தபோது என்னிடம் ஒரு சாமியார்
வந்தார். அவர் இரண்டு ரூபாய்கள் தாம் என்னிடம் கேட்டார். கொடுத்தேன். அவர் ஒரு
தாயத்துக் கொடுத்தார். அவர் ஒரு காகிதத்தில் `நல்லது நடக்கும்’ என்றும் ஒரு காகிதத்தில் `கெட்டது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில்
வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று `நல்லது நடக்கும்’ என்ற காகிதத்தில் ஏறிற்று.
ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர்
செய்கை.
வீதியிலே வித்தை காட்டுகிறவன், ஒரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும்
அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாத்தான் வித்தைகளை எல்லாம் நீங்கள்
அறிவீர்கள்.
மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே!
இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும்
என்கிறார்கள் சிலர்.எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.
`சோற்றிலே மலம்
வந்து விழுந்தது, வீட்டிலே கல்
விழுந்தது, எல்லாம் குட்டிச்
சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத்
தெரியாது.
ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும்
அசைக்க முடியாத உண்மை.
இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகிறார்கள் என்ற
வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.
குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக
விளங்குகின்றன.தீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.
இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.இறைவனிடமும்
மனிதனிடமும் பேசுகின்றன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.மனிதர்களாகவோ, மிருகங்களாகவோ தோன்றுகின்றன.
ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவர்கள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.
`புரவி எடுத்தல்’ பற்றி
கண்ணதாசன்
பாண்டிய
மண்டலத்தின் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடைபெறும்போது `புரவி எடுத்தல்’ என்றொரு விழா நடைபெறும்.
மண்ணாலே குதிரை
செய்து கோவிலுக்கு அருகில் நிறுத்திவிடும் பழக்கமே அது.
அவர்களுடைய
சக்திக்குத் தகுந்தபடி, குதிரை பெரியதாகவோ
சிறியதாகவோ இருக்கும்.
ஒரு காலத்தில்
குதிரை வீரர்களைக் கெளரவிப்பதற்காக வந்த இப்பழக்கம், நாளடைவில் எல்லாச் சிறு தேவதைகளுக்கும் எடுக்கின்ற
பழக்கமாகி விட்டது, முத்தன், முனியன், காட்டேரி என்கிற சிறு தேவதை பெயர்களெல்லாம் வீரனாக
வாழ்ந்திருந்த யாரோ ஒருவரைக் குறிக்கும் பெயர்களே!
பாண்டிய
நாட்டிலுள்ள ஐயனார் கோவில்களில் இந்தப் புரவி எடுக்கும் பழக்கம் அதிகம்.
பாண்டிய நாட்டில்
ஒரு கிராமத்திலிருந்து மறுகிராமத்திற்குப் போகிறவன், வழியில் இத்தகைய மண் புரவிகளை ஏராளமாகச் சந்திப்பான்.
இது ஒரு வகையான வீர
வணக்கம்.
மலையரசி அம்மன்’
கோயில் பற்றி கண்ணதாசன்
எங்கள் ஊரிலே `மலையரசி அம்மன்’ கோயில் என்று ஒன்று உண்டு `பூமலைச்சி அம்மன்’ கோயில் என்றும் உண்டு.
பக்கத்து ஊர்களில், `பொன்னழகி அம்மன்’ என்ற பெயரிலும், வேறு பெயர்களிலும் அம்மன் கோயில்கள் உண்டு.
இந்த அம்மன்களெல்லாம், ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் சகோதரிகள் என்றும்
கூறுகிறார்கள்.
அவற்றில் `மலையரசி அம்மன்’
மீது எனக்கு ஈடுபாடுண்டு.
அந்தக் கோவிலில் போய்ச் சத்தியம் செய்தால், யாருமே அதை மீற மாட்டார்கள்.
யாரிடமாவது கடன் கொடுத்து
ஏமாந்தவர்கள், கோர்ட்டுக்கு
போக வழி இல்லாவிட்டால், அந்தக்
கடன் பத்திரத்துக்கு ஒரு காப்பி எடுத்து மலையரசியின் கோவிலில் வைத்து விடுவார்கள்.
கடனை ஏமாற்றியவன் குடும்பம் அழிந்தே போய்விடும்.
நான் கண் முன்னாலேயே இதனைக் கண்டிருக்கிறேன்.
அங்கே மலையரசி நீதிபதியாகவே வாழ்கிறாள்.
எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியினுடைய
மாங்கல்யத்தை அடகு பிடித்திருந்தார் ஒருவர். பணத்தோடு போய்க் கேட்டபோது, `தாலி வட்டியோடு மூழ்கி விட்டது’ என்று கூறி அதைத் தர
மறுத்து விட்டார்.
`உன் குடும்பம் சந்ததி இல்லாமல் போய்விடும்’ என்று
திட்டிவிட்டார் அந்த மூதாட்டி., என்ன ஆச்சரியம்!
அந்தக் குடும்பம் ஆண் வாரிசு இல்லாமல் அழிந்து போய்விட்டது.
நமது மூதாதையர் நம்பி உரைத்த எவையுமே பொய்யல்ல என்பதை நான்
கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்.
ஏழைப்பெண் ஒருத்திக்குத் திருமணம் பேசிக்
கொண்டிருந்தார்கள். அவள் அழகாக இருந்ததால் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும்
போலிருந்தது. பொறாமைக்காரர்கள் சிலர் அந்தப் பெண்ணைப் பற்றி அவதூறு கூறித்
திருமணத்தைத் தடுத்து விட்டார்கள்.
அந்தப்பெண், காலையில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு, இருபத்தொரு நாள்கள் அம்மன் கோவிலை வலம் வந்தாள்.
அவதூறு கூறியவர்கள் குடும்பம்
சின்னா பின்னமாகி விட்டது.
கிராம தேவதைகள் பற்றி கண்ணதாசன்
`பெஞ்ச கோர்ட்’
நீதிபதிகளைப் போன்ற கிராம தேவதைகள் தம்மை நம்பினோரைக் காக்கிறார்கள்; அவர்கள் எதிரிகளைக் கருவறுக்கிறார்கள்.
முத்தாளம்மன், முத்துமாரியம்மன் போன்ற அம்மன்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவை
என்பதைக் குறிக்க ஏராளமான கதைகள் உள்ளன.
ஏதாவதொரு வகையில் அவற்றின் சக்தி வெளிப்பட்டிருக்கிறது.
சென்னை நகரில் ஆலையம்மன், எல்லையம்மன், படவட்டம்மன் என்று பல அம்மன்கள் இருக்கின்றன.
படவட்டம்மன் என்பது `படை வீட்டு அம்மன்’ என்பதின் மரூஉ ஆகும்.
இன்றைய சென்னை நகரம் பல கிராமங்களின் தொகுப்பாகும்.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, வண்ணாரப் பேட்டை
என்று பல கிராமங்கள் அக்காலத்தில் விளங்கின.
இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத கிராமங்கள். இடையில்
பெரும் காடுகள் இருந்திருக்கின்றன. இந்தக் கிராமங்களின் எல்லைகளில் சிறு தேவதைக்
கோயில்கள் இருந்திருக்கின்றன!
1945ல் சென்னை நகருக்கு
வந்து இருந்தபோது கோடம்பாக்கம் பகுதி பெரும் காடாக இருந்தது. அங்கே மிகப் பெரிய
தோட்டம், `நவாப் தோட்டம்’
என்பது.
சினிமாவுக்கு அவுட்டோர் சூட்டிங் போகிறவர்கள் கோடம்பாக்கத்துக்குத்தான் போவார்கள்.
ஆற்காடு நவாப் குதிரைகளைக் கட்டுகிற இடமாக அது இருந்ததால் `கோடா பாக்’ என்று அதற்குப் பெயர் வைத்தார்.
`கோடா’ என்றால்
உருது மொழியில் குதிரை என்று அர்த்தம்.
ஆற்காடு நவாப்பை முன்னிட்டுத்தான் அந்த ரோடும் `ஆற்காடு ரோடு’ என்று பெயர் பெற்றது.
1945ல் காடாக இருந்த
கோடம்பாக்கத்தில் மூன்று சிறு தேவதைக் கோயில்கள் இருந்தன. அவை இன்றும்
இருக்கின்றன.
வடபழனி ஆண்டவர் கோவில் சாமியார்
வடபழனி ஆண்டவர் கோவிலும் அவற்றில் ஒன்று.
அந்தக் கோவிலில் ஒரு சாமியார் இருந்தார். முள்ளாலே செய்யப்பட்ட
பாதரட்சையைத்தான் அவர் அணிவார். முட் படுக்கையில் தூங்குவார். அவர்தான் வடபழனி
கோவிலுக்குப் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார்.
முதலில் சிறு தேவதைக் கோவிலாக இருந்த அதுதான் பிற்பாடு
முருகன் கோவிலாயிற்று.
இந்தச் சிறு தேவதைகளின் சக்திகளைப் பற்றிச் சென்னை நகரில்
ஏராளமான கதைகள் உண்டு.
பாண்டிய நாட்டு அளவுக்குத் தொண்டை மண்டலத்திலும் இந்தச்
சிறு தேவதைகள் ஆதிக்கம் புரிந்து வருகின்றன.
`அரசன் அன்று
கொல்வான், தெய்வம் நின்று
கொல்லும்’ என்ற பழமொழியை இந்தச் சிறு தேவதைகள் தான் உறுதிச் செய்கின்றன.
பள்ளத்தூர் `சோலை ஆண்டவர் கோயில்’
எங்கள் ஊருக்குப் பக்கத்தில், பள்ளத்தூர் என்ற ஊரில் `சோலை ஆண்டவர் கோயில்’ என்றொரு கோவில் உண்டு.
அந்தக் கோவிலுள்ள தெய்வம் சக்தி வாய்ந்தது என்று ஊரார்
நம்புகின்றனர்.
திருட்டுப் போன தாலி திரும்பி வந்ததாகவும், வண்டிச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட குழந்தை உயிர்
பெற்றதாகவும் பல கதைகளை அங்கே கூறுகிறார்கள்.
மொத்தத்தில், இந்துக்களின் சிறு தேவதை வழிபாடு நல்ல நம்பிக்கையின்
அடிப்படையில் எழுந்ததே தவிர, மூட நம்பிக்கையில்
எழுந்தது அல்ல.
கீழ்க்குலத்து மக்களால் மட்டுமே மதித்து வணங்கப்பட்ட சிறு
தேவதைகள், இப்போது
எல்லோராலும் மதிக்கப்படுகின்றன.
அவை செய்யும் சாகஸங்களை அறிந்தவர்கள் அவற்றை `பெஞ்ச் கோர்ட் நீதிபதிகள்’ என்றழைப்பதில் என்ன தவறு? அந்தச் சிறு தேவதை ஆதர்ஸம் எனக்கும் உண்டு.
எனக்கு வழிகாட்டியவள் எங்கள் ஊர் மலையரசி அம்மன்தான் என்று
நான் இன்னமும் நம்புகிறேன்.
No comments:
Post a Comment